நெற்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாகும்பரிணீதி சோப்ராவின் புலனாய்வுத் திரைப்படமான ரிப்போர்ட்டிங் லைவ்

பரிணீதி சோப்ரா நடிப்பில் உருவான புலனாய்வுத் திரைப்படமான ரிப்போர்ட்டிங் லைவ் எதிர்வரும் ஒக்டோபர் 9 ஆம் திகதி நெற்ஃபிளிக்ஸ் ஓ.ரி.ரி தளத்தில் ஒளிபரப்பாகவுள்ளது.


நெற்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாகும்பரிணீதி சோப்ராவின் புலனாய்வுத் திரைப்படமான ரிப்போர்ட்டிங் லைவ்

பாலிவுட்டின் முன்னணி நடிகையான பரிணீதி சோப்ரா பிரதான கதாபாத்திரத்தில் நடித்துள்ள புதிய புலனாய்வுத் திரைப்படமான ரிப்போர்ட்டிங் லைவ் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 9 ஆம் திகதி முதல் நெற்ஃபிளிக்ஸ் இணையத்தளத்தில் நேரடியாக ஒளிபரப்பாகவுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் வெளியான ஷக் இணையத் தொடர் மூலம் டிஜிட்டல் திரையுலகில் தடம் பதித்திருந்த பரிணீதி சோப்ராவின் அடுத்த முக்கிய படைப்பாக இந்தத் திரைப்படம் அமைந்திருப்பது இரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

துருவ் திரிபாதி இயக்கத்தில் உருவாகியுள்ள இத்திரைப்படம், சட்டவிரோத மணல் அகழ்வு மாபியா கும்பல் தொடர்பான இரகசியங்களை வெளிக்கொண்டுவர முனையும் இளம் பெண் ஊடகவியலாளர் ஒருவரின் சவாலான பயணத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

இதில் துடிப்பான செய்தியாளராக பரிணீதி சோப்ராவும், அவருடன் களப்பணியாற்றும் அனுபவமிக்க ஒளிப்பதிவாளராக பிரபல நடிகர் தேவன் போஜானியும் நடித்துள்ளனர்.

உண்மைச் சம்பவங்களை ஆராயும் நோக்கில் சட்டவிரோத மணல் மாபியாவின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் நுழையும் இவ்விருவரும், அங்கு எதிர்கொள்ளும் பாரிய ஆபத்துகளும் உயிராபத்து நிறைந்த திருப்பங்களுமே படத்தின் பிரதான கதைக் கருவாக அமைந்துள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

பார்த்தா கிரண் தாக்கூர் மற்றும் ஜோசுவா ஷிர்சத் ஆகியோரின் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்திற்கு துருவ் திரிபாதி மற்றும் மிகிர் ஜாதவ் இணைந்து திரைக்கதை அமைத்துள்ளனர்.

அத்துடன் அமோல் பலேகர், ஆதில் ஹுசைன், சேகர் சுமன், சாஸ்வதா சட்டர்ஜி, நாசர், பிராச்சி ஷா பாண்டியா, கீதா அகர்வால் மற்றும் சமீர் கோச்சார் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இத்திரைப்படம் தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள இயக்குனர் துருவ் திரிபாதி, ஏழு வருடங்களாக மிக கவனமாக செதுக்கப்பட்ட ஒரு யதார்த்தமான திரில்லர் கதையாக இது உருவாக்கப்பட்டுள்ளதாகவும், உலகெங்கிலும் உள்ள இரசிகர்களுக்கு நெற்ஃபிளிக்ஸ் தளத்தின் ஊடாக இந்த அனுபவத்தை வழங்குவதில் பெருமகிழ்ச்சி அடைவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, பரிணீதி சோப்ரா மற்றும் தேவன் போஜானி ஆகியோர் இதுவரை ஏற்றிராத முற்றிலும் மாறுபட்ட பரிமாணங்களில் இப்படத்தில் தோன்றியுள்ளதாக தயாரிப்பாளர் பார்த்தா கிரண் தாக்கூர் தெரிவித்துள்ளார்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள Cinema Seithi WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW
Stay informed on all the latest news, real-time breaking news updates, and follow all the important headlines in india news and world news on Cinema Seithi.
Cinema Seithi-ஐ கூகுள் செய்திகளில் விருப்பமான தளமாக சேர்க்கவும்
கூகுளில் விருப்பமான
செய்தி தளமாக சேர்க்க