தொடங்கி ஆறு மாதமே ஆகாத நிலையில் விஜய் டிவியின் 'கனா கண்டேனடி' சீரியல் முடிவு
விஜய் டிவியில் கடந்த ஜனவரி 19-ம் தேதி தொடங்கப்பட்ட 'கனா கண்டேனடி' சீரியல், வெறும் 120 எபிசோடுகளிலேயே முடிவுக்கு வந்துள்ளது. டிஆர்பி ரேட்டிங்கில் எதிர்பார்த்த வெற்றியைப் பெறாததே இதற்கு காரணமாக கூறப்படுகிறது.
சென்னை: தமிழ் சின்னத்திரையில் டிஆர்பி ரேட்டிங் போட்டிகள் தினந்தோறும் கடுமையாக நடைபெற்று வருகின்றன. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெறாத அல்லது குறைந்த டிஆர்பி ரேட்டிங்கைப் பெறும் சீரியல்களை தொலைக்காட்சி நிறுவனங்கள் விரைவில் முடித்துவிடுவது வழக்கமான ஒன்றாகும். அந்த வகையில், விஜய் டிவியில் சமீபத்தில் தொடங்கப்பட்ட ஒரு முக்கிய சீரியல், ஆறு மாதங்கள் கூட முடிவடையாமலேயே நிறைவு செய்யப்பட்டுள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் தினமும் இரவு 10:30 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த 'கனா கண்டேனடி' (Kana Kandenadi) என்ற சீரியலே இது. கடந்த ஜனவரி 19-ம் தேதி தொடங்கப்பட்ட இந்தச் சீரியல், மூன்று பெண் தோழிகளின் கதையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருந்தது. திங்கள் முதல் சனி வரை தினமும் ஒளிபரப்பாகி வந்த இந்த தொடர், வெறும் 120 எபிசோடுகள் மட்டுமே ஒளிபரப்பான நிலையில் முடிவுக்கு வந்துள்ளது.
'கனா கண்டேனடி' மட்டுமின்றி, விஜய் டிவியின் மற்றொரு முக்கிய சீரியலான 'மகாநதி'யும் இந்த வாரம் நிறைவு பெற்றுள்ளது. கடந்த மூன்றரை வருடங்களுக்கும் மேலாக, 850-க்கும் மேற்பட்ட எபிசோடுகள் ஒளிபரப்பப்பட்ட நிலையில், மகாநதி சீரியல் அதன் ரசிகர்களிடையே பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. கடைசி நாள் ஷூட்டிங்கில் நடிகைகள் கண்ணீர் விட்டு அழுத காட்சிகள் இணையத்தில் வெளியாகி, ரசிகர்களின் மனதையும் நெகிழ வைத்துள்ளன.
தொலைக்காட்சி நிறுவனங்கள் பொதுவாக குறைந்த டிஆர்பி ரேட்டிங் காரணமாகவே சீரியல்களை முடிக்கின்றன. சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் உள்ளிட்ட சேனல்களுக்கு இடையே டிஆர்பி ரேட்டிங்கில் கடும் போட்டி நிலவுகிறது. இந்தப் போட்டியில் 'கனா கண்டேனடி' எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறாததே இந்த திடீர் முடிவுக்குக் காரணம் என்று கூறப்படுகிறது.
'கனா கண்டேனடி' சீரியல் தொடங்கி ஆறு மாதம் கூட ஆகாத நிலையில் முடிவுக்கு வந்திருப்பதால், அதன் ரசிகர்கள் பெரும் சோகத்தில் உள்ளனர்.