“என் இனிய தமிழ் மக்களே...” - மவுனமான பாரதிராஜாவின் குரல்; முடிந்தது ஒரு சகாப்தம்
தமிழ் சினிமாவின் மண்வாசனையை உலகுக்குக் கொண்டு சென்ற இயக்குநர் பாரதிராஜா (84) உடல்நலக் குறைவால் இன்று காலமானார். ‘16 வயதினிலே’, ‘கிழக்கே போகும் ரயில்’, ‘சிகப்பு ரோஜாக்கள்’ உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட படங்களை இயக்கிய இவர், 6 தேசிய விருதுகளையும், பத்மஸ்ரீ விருதையும் பெற்றுள்ளார்.
தமிழ் சினிமாவின் கிராமத்து மண்வாசனையை உலக அரங்கிற்குக் கொண்டு சென்ற இயக்குநர் பாரதிராஜா இன்று காலமானார். உடல்நலக் குறைவு காரணமாக வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்த அவர், தனது 84-வது வயதில் உயிரிழந்தார்.
1941-ஆம் ஆண்டு ஜூலை 17-ஆம் தேதி தேனி மாவட்டம் அல்லிநகரத்தில் பெரியமாயத்தேவர் – கருத்தம்மா தம்பதியருக்கு மகனாகப் பிறந்த இவரது இயற்பெயர் சின்னச்சாமி. பள்ளிப் பருவத்திலேயே இலக்கியம், பேச்சுப்போட்டி, மேடை நாடகங்களில் அதிக ஆர்வம் காட்டிய பாரதிராஜா, சிறிது காலம் சுகாதார ஆய்வாளராகப் பணியாற்றினார்.
ஆனால் சினிமா மீதான ஈர்ப்பு அவரை சென்னைக்கு அழைத்து வந்தது. வாழ்வாதாரத்திற்காக மேடை நாடகங்கள், பெட்ரோல் பங்க் வேலை உள்ளிட்ட பல பணிகளைச் செய்துகொண்டே சினிமாவில் வாய்ப்புக்காகப் போராடிய அவரது விடாமுயற்சிக்குப் பலனாக, இயக்குநர் பி. புல்லையாவிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றும் வாய்ப்புக் கிடைத்தது.
1977-ஆம் ஆண்டு வெளியான ‘16 வயதினிலே’ திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமான பாரதிராஜா, தனது முதல் படத்திலேயே தமிழ் சினிமாவில் புதிய பாதையை உருவாக்கினார். அந்தப் படம் கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்தின் திரைப்பயணத்திலும் முக்கியத் திருப்புமுனையாக அமைந்தது.
தமிழ் சினிமாவை ஸ்டூடியோவிலிருந்து வெளியே கொண்டு வந்த பெருமை பாரதிராஜாவையே சாரும். மண் சார்ந்த வாழ்வியல், கிராமத்து மக்களின் உணர்வுகள், காதல், உறவுகள், சமூகப் பிரச்சினைகளைத் தனது படைப்புகளில் இயல்பாகப் பதிவு செய்தார். ‘கிழக்கே போகும் ரயில்’, ‘சிகப்பு ரோஜாக்கள்’, ‘அலைகள் ஓய்வதில்லை’, ‘முதல் மரியாதை’ உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட காலத்தால் அழியாத படைப்புகளை வழங்கியுள்ளார்.
இயக்குநராக மட்டுமல்லாமல் நடிகராகவும் பாரதிராஜா ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். ‘ஆயுத எழுத்து’, ‘திருச்சிற்றம்பலம்’, ‘ஈஸ்வரன்’, ‘ராக்கி’, ‘நம்ம வீட்டுப் பிள்ளை’, ‘பாண்டிய நாடு’, ‘மீண்டும் ஒரு மரியாதை’, ‘அன்னக்கொடி’, ‘ரெட்ட சுழி’ உள்ளிட்ட பல படங்களில் குறிப்பிடத்தக்க கதாபாத்திரங்களில் நடித்தார். கடந்த 2025-ல் வெளியான ‘நிறம் மாறும் உலகில்’ படத்திலும் நடித்திருந்தார்.
திரைத்துறைக்கான அவரது பங்களிப்பைப் பாராட்டி, 2004-ஆம் ஆண்டு இந்திய அரசு அவருக்குப் பத்மஸ்ரீ விருதை வழங்கிக் கௌரவித்தது. மேலும், அவரது திரைப்படங்களுக்காக 6 தேசிய விருதுகளை வென்றுள்ளார். "என் இனிய தமிழ் மக்களே" என்று எந்த மேடையிலும் தனது உரையைத் தொடங்கும் வழக்கம் கொண்ட பாரதிராஜாவின் குரல் இன்று மவுனமாகி இருந்தாலும், அவர் உருவாக்கிய கதைகளும் கதாபாத்திரங்களும் தலைமுறைகள் கடந்தும் வாழும்.
அவரது மறைவுக்குத் திரையுலகப் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். மறைந்தாலும் மறையாத பெயராகத் தமிழ் சினிமா வரலாற்றில் பாரதிராஜா என்றும் நிலைத்திருப்பார்.