புழுதியை பொன் செய்தவர் பாரதிராஜா: வைரமுத்து இரங்கல்
இயக்குநர் பாரதிராஜாவின் மறைவுக்குக் கவிஞர் வைரமுத்து உருக்கமான இரங்கல் தெரிவித்துள்ளார். தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட வீடியோவில், “புழுதியை பொன் செய்தவர்”, “சினிமாவின் நிறம் வெள்ளை என்றிருந்ததை கருப்பு என்று மாற்றிய கலைஞன்” எனப் பாரதிராஜாவின் பங்களிப்பைப் புகழ்ந்துள்ளார்.
இயக்குநர் பாரதிராஜாவின் மறைவுக்குக் கவிஞர் வைரமுத்து இரங்கல் தெரிவித்து, தனது எக்ஸ் தளத்தில் ஒரு உருக்கமான வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், “பிதாமகனே போய் விட்டாயா? கிராமத்து ராஜாவே இறந்து விட்டாயா? எங்கள் மண் வாசனையில் இன்று சாவு மணக்கிறதா?” என்று வைரமுத்து கேள்வி எழுப்பினார்.
“அடைத்துக் கிடந்த திரையுலகக் கதவுகளைத் திறந்த வெளிக்குத் திறந்து விட்டவரே, ஆகாயத்துக்கு அடுத்து அதிக நட்சத்திரங்களை அறிமுகம் செய்தவரே, என்னையும் சுயமரியாதையோடு சுடரொளி வீசச் செய்தவரே” என்று பாரதிராஜாவைப் புகழ்ந்தார். “உடன்பிறப்பே, ரத்தத்தின் ரத்தமே” என்ற தலைவர்களின் மொழிக்கு இணையாக “என் இனிய தமிழ் மக்களே” என்ற ரத்தினச் சொற்களுக்கு முத்திரை செய்தவன் நீ மாயக்காரன்” என்று கவிஞர் குறிப்பிட்டார்.
“புழுதியைப் பொன் செய்தாய். சினிமாவின் நிறம் வெள்ளை என்றிருந்ததைக் கருப்பு என்று மாற்றிய கலைஞன் நீ. இடிந்த சுவர்களும், உடைந்த மனிதர்களும், கிழிந்த வாழ்க்கையும் உன் கதையின் கச்சாப் பொருள்கள். இந்தக் கரட்டுப்பட்டியை டெல்லி நகரத்துக்குக் கொண்டு சேர்த்த அல்லிநகரத்து அரசன் நீ” என்று பாரதிராஜாவின் பங்களிப்பைப் போற்றினார்.
“இனி நான் எப்படித் தனியாகத் தேனி போவேன்? மேற்குத் தொடர்ச்சி மலை அருவிகளால் அழுதுகொண்டே கேட்குமே, ‘எங்கே பாரதிராஜா?’ காத்தாலங்காட்டுக் கரிச்சான் கேட்குமே, ‘எங்கே பாரதிராஜா?’ கருவேல மரம் கேட்குமே, ‘எங்கே பாரதிராஜா?’ என்ன பதில் சொல்வேன்? எப்படி நான் தனித்திருப்பேன்?” என்று வைரமுத்து தனது தனிமையை உருக்கமாகப் பகிர்ந்தார்.
“நீ தூரிகை, நான் வண்ணம்; நான் தூரிகை, நீ வண்ணம். தூரிகை இல்லாமல் வண்ணமும், வண்ணம் இல்லாமல் தூரிகையும் என்னத்துக்கு ஆகும்? நீ அரிவாள், நான் கைப்பிடி; நான் அரிவாள், நீ கைப்பிடி. கைப்பிடி இல்லாத அரிவாளும், அரிவாள் இல்லாத கைப்பிடியும் என்னத்துக்கு ஆகும்? என்னை அழவிடு, என்னை அழவிடு. உடம்பின் உப்பெல்லாம் கண்ணீராய்க் கரையட்டும்.
இனி என்ன எழுத? நடிகர் திலகம் போல் நானும் புலம்புகிறேன். ‘பூங்காத்து திரும்புமா, ஏன்பாட்ட விரும்புமா?’ பாராட்ட மடியில் வைத்துத் தாலாட்ட எனக்கொரு தாய் மடி கிடைக்குமா?” என்று கேட்டுவிட்டு, “முதல் மரியாதை செய்தவனே, உனக்கென் இறுதி மரியாதை” என்று வைரமுத்து தனது இரங்கலை நிறைவு செய்தார்.