மறைந்த இயக்குநர் பாரதிராஜாவின் உடலுக்கு முதலமைச்சர் விஜய் நேரில் அஞ்சலி
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர் பாரதிராஜா (84) உடல்நலக் குறைவு காரணமாக இன்று (ஜூன் 10) காலமானார். சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த உடலுக்கு முதலமைச்சர் விஜய் நேரில் சென்று மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார்.
இயக்குநர் பாரதிராஜா (84) உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் இன்று (ஜூன் 10) அதிகாலையில் காலமானார். சமீபகாலமாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு, நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்திலேயே மருத்துவர்களின் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த ஆண்டு மார்ச்சில் அவரது மகன் மனோஜ் மறைந்த துயரில் இருந்து மீளாத நிலையிலேயே உடல்நலமும் பாதிக்கப்பட்டிருந்தது.
இந்தச் சூழலில், இயக்குநர் பாரதிராஜாவின் உடலுக்கு முதலமைச்சர் விஜய் நேரில் அஞ்சலி செலுத்தினார். சென்னை நீலாங்கரையில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த பாரதிராஜாவின் உடலுக்கு முதலமைச்சர் மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார்.
1977-ம் ஆண்டு வெளியான ‘16 வயதினிலே’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான பாரதிராஜா, கிராமியப் பின்னணியில் பல வெற்றிப் படங்களை உருவாக்கித் தமிழ்த் திரையுலகில் தனக்கென தனித்த அடையாளத்தைப் பதித்தவர். அவரது மறைவுக்குத் திரையுலகினர், அரசியல் தலைவர்கள், ரசிகர்கள் எனப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.