பிரத்தியேக வீடியோ அழைப்புக்கு ஒரு இலட்சம் ரூபாய்: நடிகை கிரணின் சந்தா கட்டணத்தால் சர்ச்சை!
நடிகை கிரண் ரத்தோட் தனது பிரத்தியேக செயலியில் வீடியோ அழைப்பு மற்றும் கலந்துரையாடலுக்கு ஒரு இலட்சம் ரூபாய் கட்டணம் அறிவித்துள்ளமை இணையத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் திரையுலகின் பிரபல நடிகையான கிரண் ரத்தோட் தனது பிரத்தியேக டிஜிட்டல் தளத்தில் ரசிகர்களுடன் உரையாடுவதற்காக சுமார் ஒரு இலட்சம் இந்திய ரூபாய் கட்டணம் அறிவித்துள்ளமை சமூக வலைத்தளங்களில் கடுமையான விமர்சனங்களையும் விவாதங்களையும் தோற்றுவித்துள்ளது.
சீயான் விக்ரமின் ஜெமினி, உலகநாயகன் கமல்ஹாசனின் அன்பே சிவம் உள்ளிட்ட பல்வேறு வெற்றித் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து புகழ்பெற்ற நடிகை கிரண் ரத்தோட், கடந்த சில வருடங்களாக தனக்கென பிரத்தியேக இணையச் செயலியை உருவாக்கி அதன் ஊடாக புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை வெளியிட்டு வருகின்றார்.
இந்நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ள புதிய அறிவிப்பொன்றில் வி.வி.ஐ.பி அங்கத்துவம் தொடர்பில் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த வி.வி.ஐ.பி அங்கத்துவத்தைப் பெற்றுக்கொள்ளும் சந்தாதாரர்களுக்கு வரம்பற்ற நேரடி உரையாடல்கள், தனிப்பட்ட வீடியோ அழைப்புகள், பிரத்தியேக காணொளிகள் மற்றும் புகைப்படங்களை பார்வையிடுவதற்கான வாய்ப்பு வழங்கப்படும் என தெரிவித்துள்ள அவர், இதற்கான கட்டணமாக தொண்ணூற்று ஒன்பதாயிரத்து தொள்ளாயிரத்து தொண்ணூற்று ஒன்பது இந்திய ரூபாயை (99,999) நிர்ணயித்துள்ளார்.
இவ்வாறான வரம்பற்ற கட்டண அறவீடுகள் மற்றும் டிஜிட்டல் சந்தா முறைகள் சமூக விழுமியங்களை சீர்குலைப்பதாக சமூக ஆர்வலர்கள் பலரும் விசனம் வெளியிட்டுள்ளதுடன், இத்தகைய தளங்கள் மீது உரிய கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
எனினும், ஒரு கலைஞர் தனது பிரத்தியேக உள்ளடக்கங்களுக்கு கட்டணம் நிர்ணயிப்பது அவரது தனிப்பட்ட உரிமை எனவும், விருப்பமுடையவர்கள் மாத்திரமே இதனை பெற்றுக்கொள்ளப் போகிறார்கள் எனவும் ஒரு தரப்பினர் அவருக்கு ஆதரவாக கருத்து வெளியிட்டு வருகின்றனர்.