லெனின் பாண்டியன் திரைப்பட விமர்சனம்: சமூக நீதிக் கருத்துக்களைக் கொண்ட திரைக்கதை
டி.டி. பாலச்சந்திரன் இயக்கத்தில் கங்கை அமரன் மற்றும் தர்ஷன் கணேசன் நடிப்பில் உருவான லெனின் பாண்டியன் திரைப்படத்தின் விமர்சனம்.
டி.டி. பாலச்சந்திரன் இயக்கத்தில் கங்கை அமரன், தர்ஷன் கணேசன், ரோஜா, ஸ்ரிதா ராவ் மற்றும் ஜார்ஜ் மரியான் ஆகியோர் நடிப்பில் வெளியான 'லெனின் பாண்டியன்' திரைப்படம், சமூக அவமானம் மற்றும் சமத்துவம் குறித்த வலுவான விவாதத்தை முன்வைக்கிறது.
ஒரு லொறி மோதி உயிரிழந்த தனது ஆட்டிற்கு நீதி கேட்டுப் போராடும் துரைராசு என்ற முதியவரின் பார்வையில் கதை தொடங்குகிறது.
வளர்ப்புப் பிராணியின் இழப்பை மையமாகக் கொண்டு சமூகத்தின் பார்வையை ஆழமாக விவரிக்கும் வகையில் இந்தக் காட்சி அமைக்கப்பட்டுள்ளதுடன், கல்வியும் சட்டமும் ஒரு மனிதனை எவ்வாறு வலிமையாக்குகிறது என்பதை நீதிபதி பீமராவ் பாத்திரத்தின் மூலம் இயக்குநர் வெளிப்படுத்தியுள்ளார்.
துரைராசுவின் போராட்டத்தால், கருணை அடிப்படையில் காவல்துறைப் பணியைப் பெற்று சக காவலர்களால் ஏளனம் செய்யப்படும் காவலர் மருவர்மன் சுந்தரபாண்டியன் அவரது வாழ்க்கைக்குள் வருகிறார்.
சமூக அவமானங்களால் எழும் பாதுகாப்பற்ற மனநிலையும், தன்னை நிரூபிக்கத் துடிக்கும் ஒரு இளைஞனின் தடுமாற்றங்களும் பாண்டியன் கதாபாத்திரத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளன.
எனினும், வலுவான கருத்துக்களைக் கொண்ட கதைக்களம் இரண்டரை மணி நேர ஓட்டத்தில் தெளிவற்ற திரைக்கதை அமைப்பால் சற்றே தொய்வடைகிறது. கதாநாயகிகளாக வரும் ரோஜா மற்றும் ஸ்ரிதா ராவ் ஆகியோரின் பாத்திரங்கள் தொடக்கத்தில் உறுதியாக வடிவமைக்கப்பட்டிருந்தாலும், பின்னர் அவை முழுமையற்ற முறையில் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன.
படத்தில் நிலவும் திரைக்கதை பலவீனங்களுக்கு மத்தியிலும் இசைஞானி இளையராஜாவின் பின்னணி இசை காட்சிகளுக்கு உயிரூட்டுகிறது. 'முதல் மரியாதை' திரைப்படத்தின் 'பூங்காற்று திரும்புமா' பாடலின் பயன்பாடு காட்சிக்கு இயல்பான உணர்வைச் சேர்த்துள்ளது.
சமூக அமைப்பால் மனிதர்களுக்கு ஏற்படும் அவமானங்களையும், சமூக நீதிக்கான கருத்துக்களையும் ஆழமாகப் பேச முற்பட்டிருந்தாலும், முழுமையடையாத எழுத்து வடிவமைப்பு காரணமாக இப்படம் சில இடங்களில் தாக்கத்தை ஏற்படுத்தத் தவறுகிறது.