குடும்பத்தினர் மற்றும் பிள்ளைகள் முன்னிலையில் மீண்டும் திருமணம் செய்து கொண்ட சூர்யா - ஜோதிகா தம்பதி
தமிழ் திரையுலகின் நட்சத்திர தம்பதிகளான சூர்யா மற்றும் ஜோதிகா தங்களது 20 ஆவது திருமண ஆண்டு நிறைவை முன்னிட்டு பிள்ளைகள் மற்றும் குடும்பத்தினர் முன்னிலையில் திருமண உறுதிமொழிகளைப் புதுப்பித்துள்ளனர்.
தமிழ் திரையுலகின் நட்சத்திர தம்பதிகளான சூர்யா மற்றும் ஜோதிகா தங்களது 20 ஆவது திருமண ஆண்டு நிறைவை முன்னிட்டு, குடும்பத்தினர் மற்றும் பிள்ளைகள் முன்னிலையில் மீண்டும் திருமண உறுதிமொழிகளைப் புதுப்பித்துக்கொண்டுள்ளனர்.
கடந்த 2006 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 ஆம் திகதி திருமண பந்தத்தில் இணைந்த சூர்யா மற்றும் ஜோதிகா, இரு தசாப்த கால தங்களது இல்லற வாழ்க்கையின் மைல்கல்லைக் குறிக்கும் வகையில் இந்த சிறப்பு நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர்.
நெருங்கிய உறவினர்கள், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் சூழ நடைபெற்ற இந்த வைபவத்தில், இருவரும் வெள்ளை நிற பாரம்பரிய உடைகளில் கலந்துகொண்டனர்.
குறித்த நிகழ்வின் போது தம்பதியின் மகன் தேவ் தனது தாயாரான ஜோதிகாவை திருமண மேடை நோக்கி அழைத்து வந்தார். அதேநேரம், அவர்களது மகள் தியா தோழி மற்றும் துணைப் பொறுப்பினை ஏற்று நிகழ்வை முன்னெடுத்தார்.
பிள்ளைகளின் பங்களிப்புடன் நடைபெற்ற இந்த நெகிழ்ச்சியான தருணங்கள் தொடர்பான காணொளியை ஜோதிகா தனது உத்தியோகபூர்வ சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
திரைத்துறையில் நட்சத்திர ஜோடியாக விளங்கும் சூர்யா - ஜோதிகா தம்பதி, நிஜ வாழ்க்கையிலும் தங்களது 20 ஆண்டுகால பிணைப்பை இவ்வாறானதொரு நெகிழ்ச்சியான நிகழ்வு மூலம் கொண்டாடியுள்ளமைக்கு சினிமா பிரபலங்களும் உலகெங்கிலும் உள்ள தமிழ் இரசிகர்களும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.