யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில் அதிரடி திரில்லர் திரைப்படத்தை இயக்கவுள்ளார் இயக்குனர் ராம்

தனது அடுத்த படைப்பாக அதிரடி திரில்லர் திரைப்படத்தை இயக்கவுள்ளதாகவும் அதற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கவுள்ளதாகவும் இயக்குனர் ராம் அறிவித்துள்ளார்.


யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில் அதிரடி திரில்லர் திரைப்படத்தை இயக்கவுள்ளார் இயக்குனர் ராம்

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனரான ராம், தனது அடுத்த படைப்பாக ஒரு அதிரடி திரில்லர் (Action Thriller) திரைப்படத்தை இயக்கவுள்ளதாகவும், அத்திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கவுள்ளதாகவும் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

நிவின் போலி, சூரி மற்றும் அஞ்சலி ஆகியோர் நடிப்பில் எதிர்வரும் ஒக்டோபர் முதலாம் திகதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள 'ஏழு கடல் ஏழு மலை' திரைப்படத்தின் விளம்பர நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இந்த தகவலைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

கற்றது தமிழ், தங்க மீன்கள், தரமணி, பேரன்பு மற்றும் பறந்து போ போன்ற உணர்வுபூர்வமான மற்றும் ஆழமான சமூகப் பின்னணி கொண்ட திரைப்படங்களை இயக்கி தேசிய விருது உள்ளிட்ட பல அங்கீகாரங்களைப் பெற்ற இயக்குனர் ராம், தனது திரைப்பயணத்தில் முதன்முறையாக முற்றிலும் மாறுபட்ட ஆக்‌ஷன் திரில்லர் களத்தில் களமிறங்கவுள்ளார்.

இந்த வகைக் கதைக் களத்தைத் தேர்ந்தெடுப்பதற்கான யோசனையை இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவே தமக்கு வழங்கியதாக இயக்குனர் ராம் அந்த நிகழ்வில் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

இது குறித்து மேலும் கருத்து வெளியிட்ட இயக்குனர், தாம் யுவன் சங்கர் ராஜாவிடம் கதையைக் கூறியபோது, வழக்கமான பாணியை மாற்றி இந்த அதிரடி பாணியில் திரைப்படத்தை உருவாக்குமாறு அவர் கேட்டுக்கொண்டதாகக் குறிப்பிட்டார்.

எனவே இத்திரைப்படம் சிறப்பாக வெளிவருவதை உறுதி செய்யும் பொறுப்பு யுவனுக்கே அதிகம் உள்ளது என்றும் அவர் நகைச்சுவையாகக் கூறினார். இத்திரைப்படத்திற்கான ஆரம்பக்கட்டப் பணிகள் விரைவில் ஆரம்பமாகவுள்ளதாகப் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இயக்குனர் ராமின் அறிமுகத் திரைப்படமான 'கற்றது தமிழ்' முதல் அவரது அனைத்து இயக்கங்களிலும் யுவன் சங்கர் ராஜா தொடர்ந்து இணைந்து பணியாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முன்னதாக 'பறந்து போ' திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் பாடல்களை அமைத்திருந்த போதிலும், பின்னணி இசையை யுவன் சங்கர் ராஜாவே வழங்கியிருந்தார். இந்நிலையில், இந்த புதிய கூட்டணி மீண்டும் இணையும் அதிரடி திரில்லர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் தற்போதே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள Cinema Seithi WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW
Stay informed on all the latest news, real-time breaking news updates, and follow all the important headlines in india news and world news on Cinema Seithi.
Cinema Seithi-ஐ கூகுள் செய்திகளில் விருப்பமான தளமாக சேர்க்கவும்
கூகுளில் விருப்பமான
செய்தி தளமாக சேர்க்க