'மொத ராத்திரி' திரைப்பட இறுதிக்காட்சிப் படப்பிடிப்பின் போது கதறி அழுதோம்: இயக்குனர் ராஜா கருப்பசாமி நெகிழ்ச்சி
மொத ராத்திரி திரைப்படத்தின் உணர்ச்சிகரமான இறுதிக்காட்சி படமாக்கப்பட்ட பின்னர் தானும் நடிகை அனிஷ்மாவும் கண்ணீர் விட்டு அழுததாக இயக்குனர் ராஜா கருப்பசாமி தெரிவித்துள்ளார்.
றிஷிகாந்த் மற்றும் அனிஷ்மா அனில்குமார் நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்று வரும் 'மொத ராத்திரி' திரைப்படத்தின் இறுதிக்காட்சிப் படப்பிடிப்பின் பின்னர் தானும் நடிகை அனிஷ்மாவும் உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் விட்டு அழுததாக இயக்குனர் ராஜா கருப்பசாமி தெரிவித்துள்ளார்.
இத்திரைப்படத்தின் படப்பிடிப்புத் தளத்தில் இடம்பெற்ற உணர்வுபூர்வமான தருணங்கள் குறித்து இயக்குனர் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள உணர்வுபூர்வமான பதிவிலேயே இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
அறிமுக இயக்குனர் ராஜா கருப்பசாமியின் இயக்கத்தில் உருவான இத்திரைப்படம் கடந்த ஓகஸ்ட் 21 ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகி, பின்னர் கடந்த செப்டெம்பர் 18 ஆம் திகதி நெட்பிளிக்ஸ் (Netflix) ஓடிடி தளத்தில் வெளியானது. தனுஷ், சிலம்பரசன் மற்றும் கமல் ஹாசன் உள்ளிட்ட முன்னணித் திரைத்துறை நட்சத்திரங்களின் பாராட்டைப் பெற்ற இத்திரைப்படம், தற்போது இணைய வெளியீட்டிலும் பரவலான கவனத்தை ஈர்த்து வருகின்றது.
இத்திரைப்படத்தில் 'முத்துச்செல்வி' என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த அனிஷ்மாவின் அர்ப்பணிப்பைப் பாராட்டியுள்ள இயக்குனர், படத்தின் இறுதிக்காட்சியில் அவரது நடிப்பு, நடனம் மற்றும் கதறல் ஆகியவை திரையில் வெறும் காட்சிகளாகத் தோன்றினாலும் படக்குழுவினருக்கு அவை அளப்பரிய உணர்வுபூர்வமான அர்த்தத்தைக் கொண்டவை என விவரித்துள்ளார்.
அந்த உணர்ச்சிகரமான இறுதிக்காட்சியைப் படமாக்கிய பின்னர், தாங்கள் இருவரும் ஒருவரையொருவர் தேற்ற முடியாத அளவுக்கு கண்ணீர் விட்டு அழுதுவிட்டதாக அவர் தனது பதிவில் நினைவு கூர்ந்துள்ளார்.
அத்துடன், திரைப்படத்தில் தனது கதாபாத்திரத்திற்கு உயிரூட்டியதுடன் மட்டுமல்லாமல், சொந்தமானவர்கள் கூட ஆதரவளிக்கத் தவறிய பல கடினமான சூழ்நிலைகளில் தமக்கும் தமது படக்குழுவினருக்கும் அனிஷ்மா பக்கபலமாக நின்றதாகக் குறிப்பிட்ட இயக்குனர் ராஜா கருப்பசாமி, அவருக்கு நன்றி சொல்வதா அல்லது மன்னிப்புக் கோருவதா என்று தெரியாத அளவுக்கு அவரது உதவி அளப்பரியது என்றும் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.