ஜெயிலர் 2 திரைப்படத்தின் இரண்டாவது பாடல் செப்டெம்பர் 25 இல் வெளியீடு: சன் பிக்சர்ஸ் உத்தியோகபூர்வ அறிவிப்பு
ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகும் ஜெயிலர் 2 திரைப்படத்தின் இரண்டாவது பாடல் செப்டெம்பர் 25 ஆம் திகதி வெளியாகும் என சன் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது.
சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகி வரும் 'ஜெயிலர் 2' திரைப்படத்தின் இரண்டாவது பாடல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (செப்டெம்பர் 25) வெளியாகும் என தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
'ஒன் சன் ஒன் மூன்' (One Sun One Moon) எனப் பெயரிடப்பட்டுள்ள இப்பாடல் தொடர்பான அறிவிப்பானது, திரைப்படத்தின் இயக்குனர் நெல்சன் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் இடம்பெறும் நகைச்சுவையான விசேட காணொளி ஊடாக வெளியிடப்பட்டுள்ளது.
கலாநிதி மாறனின் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இத்திரைப்படத்தின் புதிய அறிவிப்புக் காணொளியில், பாடலின் தரம் மற்றும் வடிவமைப்பு குறித்து நெல்சன் மற்றும் அனிருத் ஆகியோருக்கு இடையில் இடம்பெறும் உரையாடல்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.
இப்பாடலை சர்வதேச தரத்திலான அதிரடிப் பாடலாக (International Mass) உருவாக்குமாறு இயக்குனர் நெல்சன் குறிப்பிடுவதும், அதன் பின்னர் இருவரும் பரஸ்பரம் நகைச்சுவையாக விவாதிப்பதும் அக்காணொளியில் சுவாரஸ்யமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், ரஜினிகாந்தின் 'முத்துவேல் பாண்டியன்' கதாபாத்திரத்தின் பின்னணிக் குரல் துணுக்கும் இக்காணொளியில் இணைக்கப்பட்டு எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
ரஜினிகாந்தின் ரசிகர்களால் பெரிதும் போற்றப்படும் வாசகத்தை அடிப்படையாகக் கொண்டு தலைப்பிடப்பட்டுள்ள இப்பாடல், திரைப்படத்தில் கதாநாயகனின் அறிமுகத்தை வெளிப்படுத்தும் பிரதான பாடலாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
முன்னதாக கடந்த ஓகஸ்ட் 21 ஆம் திகதி வெளியான இத்திரைப்படத்தின் முதலாவது பாடலான 'ஆலா போலேலோ' (Ala Bolelo) ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்த நிலையில், தற்போது வெளியாகவுள்ள இரண்டாவது பாடல் மீது அதிக எதிர்பார்ப்பு நிலவுகின்றது.
கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியாகி சர்வதேச ரீதியில் பெரும் வெற்றி பெற்ற ஜெயிலர் திரைப்படத்தின் தொடர்ச்சியாக உருவாகும் இப்படம், எதிர்வரும் ஒக்டோபர் 15 ஆம் திகதி உலகளாவிய திரையரங்குகளில் திரையிடப்படவுள்ளது.
இத்திரைப்படத்தில் ரஜினிகாந்துடன் இணைந்து சிவராஜ்குமார், வித்யா பாலன், சுராஜ் வெஞ்சாரமூடு உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.