பாரதிராஜா உடலுக்கு முழு அரசு மரியாதை: முதலமைச்சர் விஜய் அறிவிப்பு
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர் பாரதிராஜா உடல்நலக் குறைவால் இன்று சென்னையில் காலமானார். அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்த முதலமைச்சர் விஜய், பாரதிராஜாவின் உடலுக்கு முழு அரசு மரியாதை செலுத்தப்படும் என்று அறிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான பாரதிராஜா, உடல்நலக்குறைவு காரணமாக இன்று சிகிச்சை பலனின்றி சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். அவரது திடீர் உயிரிழப்பு தமிழ் சினிமாவைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
ரசிகர்களும், திரைப்பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், பாரதிராஜாவின் உடலுக்கு முழு அரசு மரியாதை செலுத்தப்படும் என்று முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "தமிழ்த் திரையுலகின் இயக்குநர் இமயம் பாரதிராஜா காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த மனவேதனையும் துயரமும் அடைந்தேன். கிராமியப் பின்னணியில் வாழ்வியல் உயிரோட்டத்துடன் பல வெற்றிப் படங்களை உருவாக்கி, தமிழ்த் திரைப்பட உலகில் தனக்கென தனி முத்திரை பதித்தவர் இயக்குநர் பாரதிராஜா.
தனது படைப்புகளுக்காக நாட்டின் உயரிய விருதான பத்மஸ்ரீ உள்ளிட்ட பல்வேறு தேசிய, மாநில விருதுகளைப் பெற்றவர். பல தலைமுறைக் கலைஞர்களை உருவாக்கிய அவரது பங்களிப்பு தமிழ்த் திரைப்பட வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருக்கும்.
இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் மறைவு, தமிழ்த் திரையுலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், திரைப்படத் துறையினருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன். திரைத்துறையில் பாரதிராஜாவின் பங்களிப்பைப் போற்றி, அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படும்" என்று தெரிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பு திரையுலகினர் மற்றும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.