அர்ஜுன் தாஸ் - ஐஸ்வர்யா லெக்ஷ்மி இணையும் '#லவ்' தொடர்: ஒக்டோபர் 2 இல் நெற்ஃபிளிக்ஸில் வெளியாகவுள்ளதாக அறிவிப்பு

அர்ஜுன் தாஸ் மற்றும் ஐஸ்வர்யா லெக்ஷ்மி நடிப்பில் உருவான காதல் நாடகத் தொடரான '#லவ்' எதிர்வரும் ஒக்டோபர் 2 ஆம் திகதி நெற்ஃபிளிக்ஸில் வெளியாகவுள்ளது.

Published on: 17 Sep 2026, 12:57 pm

எம்மை கூகுளில் பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

Add as Preferred Source
அர்ஜுன் தாஸ் - ஐஸ்வர்யா லெக்ஷ்மி இணையும் '#லவ்' தொடர்: ஒக்டோபர் 2 இல் நெற்ஃபிளிக்ஸில் வெளியாகவுள்ளதாக அறிவிப்பு

நடிகர் அர்ஜுன் தாஸ் மற்றும் நடிகை ஐஸ்வர்யா லெக்ஷ்மி ஆகியோர் பிரதான கதாபாத்திரங்களில் நடித்துள்ள காதல் நாடகத் தொடரான '#லவ்' எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 2 ஆம் திகதி பிரபல ஓ.ரி.ரி. தளமான நெற்ஃபிளிக்ஸில் வெளியாகவுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இத்தொடரை சௌந்தர்யா ரஜினிகாந்த் உருவாக்கியுள்ளதுடன், அதன் தயாரிப்புப் பொறுப்பாளராகவும் செயற்பட்டுள்ளார். தொழில் ரீதியாக வெற்றிகண்ட தாரா மற்றும் மெத்யூ ஆகிய இரு தொழில்முனைவோர் தங்களது வாழ்க்கைத் துணையைத் தேடும் பயணத்தை மையமாகக் கொண்டு இந்தத் தொடரின் கதைக்களம் நகர்கின்றது. 

இதில் தாராவாக ஐஸ்வர்யா லெக்ஷ்மியும், மெத்யூவாக அர்ஜுன் தாஸும் நடித்துள்ளனர். 'மாரி' திரைப்படத்தை இயக்கிய பாலாஜி மோகன் இத்தொடரின் இயக்குநராகப் பணியாற்றியுள்ளார்.

இந்தத் தொடர் குறித்து கருத்து வெளியிட்டுள்ள சௌந்தர்யா ரஜினிகாந்த், இன்றைய நவீன காலகட்டத்தின் உறவுகளை அதன் அரவணைப்பும் உணர்வுகளும் குறையாமல் இயல்பாக வெளிப்படுத்திய விதம் தன்னைக் கவர்ந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். 

அத்துடன் லட்சியமும் குறைகளும் நிறைந்த, இரசிகர்கள் எளிதில் ஒன்றிணையக்கூடிய கதாபாத்திரங்களை பாலாஜி மோகன் உருவாக்கியுள்ளதாகவும், அர்ஜுன் தாஸ் மற்றும் ஐஸ்வர்யா லெக்ஷ்மி ஆகியோர் அக்கதாபாத்திரங்களுக்கு புதுமையான ஆற்றலை வழங்கியுள்ளதாகவும் அவர் பாராட்டியுள்ளார்.

இத்தொடர் குறித்து பேசிய இயக்குநர் பாலாஜி மோகன், காதல் மற்றும் மனிதர்களைச் சந்திக்கும் முறைகள் மாறியிருந்தாலும் உறவுகளின் அடிப்படை உணர்வுகள் எப்போதும் மாறாதவையாகவே உள்ளன எனத் தெரிவித்துள்ளார்.

இருவர் காதலிப்பதை மட்டுமே மையப்படுத்தாமல் நட்பு, குடும்பம், லட்சியம் மற்றும் தங்களை உணர்ந்து கொள்ளும் பயணம் ஆகியவற்றை சம அளவில் வெளிப்படுத்தும் படைப்பாக இத்தொடர் உருவாக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இத்தொடரில் அர்ஜுன் சிதம்பரம், காயத்ரி ஹரிஹரன், சூர்யா ராஜீவன், அர்ஜுன் மனோகர், அபிஷேக் ஜோசப் ஜோர்ஜ், ஹரிணி சுந்தரராஜன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

ஷான் ரோல்டன் இசையமைத்துள்ள இத்தொடருக்கு ராஜீவன் கலை இயக்குநராகப் பணியாற்றியுள்ளார். இத்தொடரை நெற்ஃபிளிக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து மே 6 என்டர்டெயின்மென்ட் (May 6 Entertainment) மற்றும் ஃபேன் பாய் புரொடக்ஷன் (Fanboy Production) ஆகிய நிறுவனங்கள் தயாரித்துள்ளன.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள Cinema Seithi WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW