ரேவதிக்கு வயதான நபரை திருமணம் செய்யத் திட்டம்: கார்த்திகை தீபம் தொடரில் அடுத்த கட்ட பரபரப்பு
கார்த்திகை தீபம் தொடரில் ரேவதிக்கு வயதான ஒருவரை திருமணம் செய்து வைக்க சந்திரகலாவும் சிவனாண்டியும் திட்டம் தீட்டும் நிலையில், பரமேஸ்வரியைத் தேடி கார்த்திக் நடவடிக்கை எடுக்கிறார்.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் தொடரில், சாமுண்டீஸ்வரியின் உத்தரவின் பேரில் தனது கணவர் கட்டிய வீட்டை சந்திரகலாவே அடித்து நொறுக்கித் தீ வைக்கும் நிலை ஏற்பட்டது.
இதனால் கார்த்திக் மற்றும் ரேவதி மீது கடும் ஆத்திரத்தில் இருக்கும் சந்திரகலா, அவர்கள் இருவரையும் எப்போதும் சேரவிடக் கூடாது என்ற வன்மத்துடன் செயல்படத் தொடங்குகிறார்.
இந்த நிலையில் சாமுண்டீஸ்வரி வீட்டில் அனைவரும் சாப்பிட அமரும்போது, ரேவதி கார்த்திக்கின் புகைப்படத்தை எதிரில் வைத்துக்கொண்டு சாப்பிடுவதைப் பார்த்து சாமுண்டீஸ்வரியும் சந்திரகலாவும் கோபமடைகின்றனர்.
சாமுண்டீஸ்வரி கோபத்துடன் தனது அறைக்குச் செல்ல, அவரைப் பின்தொடரும் சந்திரகலா, ரேவதியின் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த அவருக்கு உடனடியாக வேறு ஒருவரைத் திருமணம் செய்து வைப்பதே ஒரே தீர்வு எனக் கூறி சாமுண்டீஸ்வரியைச் சம்மதிக்க வைக்கிறார்.
இதற்கிடையே தான் கர்ப்பமாக இருப்பது போல் வாந்தி எடுத்து நடித்து, சாமுண்டீஸ்வரியை ரேவதி மேலும் வெறுப்பேற்றுகிறார். இதனால் ஆத்திரமடையும் சந்திரகலா, சிவனாண்டியைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு, ரேவதிக்கு ஒரு வயதான நபரைத் திருமணம் செய்து வைக்கத் திட்டம் தீட்டுகிறார்.
மறுபுறம், கார்த்திக் காவலரின் மனைவியைப் பற்றி தீவிரமாக விசாரணை செய்கிறார். அந்த விசாரணையில், அவர் சாமுண்டீஸ்வரி வீட்டில் வேலை செய்யும் பரமேஸ்வரி என்பது தெரியவருகிறது.
பரமேஸ்வரியின் புகைப்படத்தை அனுப்பி கார்த்திக் விசாரிக்கும்போது, அவர் திருப்பதி சென்றுள்ளதாக ரேவதி தகவல் அளிக்கிறார். உடனடியாக கார்த்திக் தனது நண்பர்களைத் தொடர்புகொண்டு அவர்களைப் பின்தொடருமாறு அறிவுறுத்துகிறார்.