ரூபாய் 46 கோடி காசோலை மோசடி புகார்: தங்கை ராதாவின் குற்றச்சாட்டுகளுக்கு நடிகை அம்பிகா விளக்கம்
நடிகை ராதா அளித்த ரூபாய் 46 கோடி காசோலை மோசடி புகாருக்கு நடிகை அம்பிகா மறுப்பு தெரிவித்துள்ளார். ஏ.ஆர்.எஸ் கார்டன் சொத்து மற்றும் காசோலை விவகாரம் குறித்த தனது தரப்பு விளக்கத்தை அவர் வெளியிட்டுள்ளார்.
தனது தங்கை ராதா அளித்த பண மோசடி மற்றும் காசோலை திருட்டு புகார் முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என்றும், உண்மையில் அவர்தான் தனக்குப் பணம் தர வேண்டும் என்றும் மூத்த நடிகை அம்பிகா தெரிவித்துள்ளார்.
கையொப்பமிட்ட வெற்று காசோலைகளைத் திருடி சுமார் 46 கோடி ரூபாய் வரை மோசடி செய்ய முயன்றதாக ராதா சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அம்பிகா மற்றும் அவரது சகோதரர் மல்லிகார்ஜுனன் மீது புகார் அளித்திருந்தார்.
இந்த விவகாரம் தொடர்பாகச் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அம்பிகா, தன் மீதான குற்றச்சாட்டுகளைத் திட்டவட்டமாக மறுத்து விரிவான விளக்கம் அளித்துள்ளார்.
குடும்பச் சொத்துப் பிரச்சனையைத் தீர்ப்பதற்காக ராதாவே முன்வந்து மூன்று காசோலைகளைத் தன்னிடம் வழங்கியதாக அம்பிகா குறிப்பிட்டார். ஆனால், வங்கியில் அவரே அந்தப் பணப் பரிவர்த்தனையை நிறுத்தியதால் காசோலைகள் பவுன்ஸ் ஆனதாகவும், உண்மையில் பாதிக்கப்பட்ட தான் தான் புகார் அளித்திருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
மிகவும் எச்சரிக்கையாகத் தனது கைப்பையை கூட எண் பூட்டு போட்டுப் பூட்டி வைக்கும் ராதா, கையொப்பமிட்ட வெற்று காசோலைகளை வீட்டில் சாதாரணமாக விட்டுச் சென்றார் என்ற குற்றச்சாட்டை நம்ப முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
சென்னை போரூரில் உள்ள புகழ்பெற்ற ஏ.ஆர்.எஸ் கார்டன் சொத்து குறித்துப் பேசிய அம்பிகா, அது முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் தங்களுக்கு இலவசமாக வழங்கிய நிலம் அல்ல என்றும், தங்களுடைய சொந்த உழைப்பில் தேவர் பிலிம்ஸ் குடும்பத்திடமிருந்து வாங்கப்பட்ட சொத்து என்றும் தெரிவித்தார்.
தனது பெயரில் உள்ள முதலெழுத்தை குறிக்கும் ஏ.ஆர்.எஸ் கார்டன் பெயர்ப் பலகையைத் தன்னிடம் தெரிவிக்காமலேயே மாற்றியுள்ளனர் எனவும், அச்சொத்தை எக்காரணம் கொண்டும் விற்க அனுமதிக்க மாட்டேன் என்றும் கூறினார். மேலும், தனக்குச் சொந்தமான பெருமளவு தங்க நகைகளும் ராதாவிடமே உள்ளதாக அவர் குற்றம் சாட்டினார்.