பண மோசடி மற்றும் கொலை மிரட்டல் புகார்: பிக்பாஸ் பிரபலம் நடிகை வர்ஷினி வெங்கட் கைது
குறும்படம் தயாரிக்க முதலீடு கோரி இளைஞரிடம் பணம் பறித்து கொலை மிரட்டல் விடுத்த வழக்கில், பிக்பாஸ் பிரபலம் நடிகை வர்ஷினி வெங்கட்டை சென்னை போலீசார் கைது செய்துள்ளனர்.
குறும்படம் தயாரிப்பதாகக் கூறி இளைஞரிடம் பல லட்சம் ரூபாய் மோசடி செய்து, கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் பிக்பாஸ் பிரபலம் நடிகை வர்ஷினி வெங்கட்டை சென்னை கிண்டி போலீசார் கைது செய்துள்ளனர்.
ஆந்திர மாநிலம் விஜயவாடாவைச் சேர்ந்த வருண் என்ற 26 வயது இளைஞர், குறும்படம் தயாரிப்பு மற்றும் பங்குச்சந்தை முதலீட்டுத் தொழில் செய்து வருகிறார்.
சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதியில் தங்கி தொழில் நிமித்தமாகப் பணியாற்றி வந்த இவருக்கு, சஞ்சய் என்பவர் மூலம் நடிகை வர்ஷினி வெங்கட்டின் அறிமுகம் கிடைத்துள்ளது.
விஜய் தொலைக்காட்சியின் பிக்பாஸ் நிகழ்ச்சி மற்றும் சின்னத்திரை தொடர்கள் மூலம் பிரபலமான வர்ஷினி, குறும்படம் தயாரிக்க முதலீடு செய்யுமாறு வருணிடம் கோரியுள்ளார்.
இதை நம்பிய வருண், வர்ஷினிக்கு நிதி உதவி வழங்கியுள்ளார். கடந்த ஆகஸ்ட் 22ஆம் தேதி கிண்டியில் உள்ள விடுதியில் வருணை நேரில் சந்தித்த வர்ஷினி, சஞ்சய் மற்றும் இருவர் ரொக்கமாக ஐம்பதாயிரம் ரூபாயைப் பெற்றுள்ளனர்.
தொடர்ந்து வர்ஷினியின் வங்கிக் கணக்கிற்கு மூன்று லட்சம் ரூபாய் அனுப்பப்பட்டுள்ளது. பின்னர் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளைத் தீர்த்து வைப்பதாகக் கூறி, சஞ்சய் கூடுதலாக இரண்டு லட்சம் ரூபாயைப் பெற்றுள்ளார்.
இந்நிலையில், கடந்த செப்டம்பர் 16ஆம் தேதி வருணைத் தொடர்பு கொண்ட சஞ்சய், மேலும் 27 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டியுள்ளார். பணத்தைத் தராவிட்டால் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிடுவதாகவும், பொய் புகார் அளித்து சிறையில் அடைத்துவிடுவோம் என்றும் மிரட்டல் விடுத்துள்ளார்.
பாதிக்கப்பட்ட வருண் அளித்த புகாரின் பேரில் கிண்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட நடவடிக்கையாக நடிகை வர்ஷினி வெங்கட்டை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இவ்வழக்கில் தொடர்புடைய சஞ்சய் உள்ளிட்ட தலைமறைவாக உள்ள மற்ற நபர்களைக் காவல் துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.