தமிழ் சினிமாவின் திரைக்கதை ஜாம்பவான் கே. பாக்யராஜ் காலமானார்; ரசிகர்கள், திரையுலகம் சோகத்தில்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர், இயக்குநர் மற்றும் திரைக்கதை ஆசிரியரான கே. பாக்யராஜ், மாரடைப்பால் 73 வயதில் காலமானார். அவரது மறைவால் திரையுலகினரும் ரசிகர்களும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Published on: 27 Jun 2026, 01:10 pm

எம்மை கூகுளில் பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

Add as Preferred Source
தமிழ் சினிமாவின் திரைக்கதை ஜாம்பவான் கே. பாக்யராஜ் காலமானார்; ரசிகர்கள், திரையுலகம் சோகத்தில்
கே. பாக்யராஜ்

தமிழ் திரைப்பட உலகின் முன்னணி நடிகர், இயக்குநர், திரைக்கதை ஆசிரியர் மற்றும் வசனகர்த்தாவாகப் புகழ்பெற்ற கே. பாக்யராஜ், மாரடைப்பு காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 73.

உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று காலை திடீர் மாரடைப்பால் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அவரது மறைவு தமிழ் திரையுலகையும், ரசிகர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

1953 ஜனவரி 7-ஆம் தேதி ஈரோடு மாவட்டம் வெள்ளகோவிலில் பிறந்த கிருஷ்ணசாமி பாக்யராஜ், இயக்குநர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக தனது திரைப்பயணத்தை தொடங்கினார். '16 வயதினிலே', 'கிழக்கே போகும் ரயில்', 'சிகப்பு ரோஜாக்கள்' உள்ளிட்ட படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றிய அவர், பின்னர் 'புதிய வார்ப்புகள்' திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.

1979-ஆம் ஆண்டு வெளியான 'சுவர் இல்லாத சித்திரங்கள்' திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான பாக்யராஜ், இயக்குநர் மற்றும் நடிகர் என இரு துறைகளிலும் தனக்கென தனி முத்திரையை பதித்தார்.

'அந்த 7 நாட்கள்', 'முந்தானை முடிச்சு', 'இன்று போய் நாளை வா', 'ஒரு கை ஓசை', 'மவுன கீதங்கள்', 'சின்ன வீடு', 'டார்லிங் டார்லிங் டார்லிங்', 'தூறல் நின்னு போச்சு', 'சுந்தரகாண்டம்' உள்ளிட்ட ஏராளமான வெற்றிப் படங்களை இயக்கி நடித்துள்ளார்.

குடும்ப உறவுகள், நகைச்சுவை, சமூகக் கருத்துகள் மற்றும் இயல்பான வசனங்களால் ரசிகர்களின் மனதில் அழியாத இடத்தைப் பிடித்தவர் பாக்யராஜ். தமிழ் சினிமாவில் சிறந்த திரைக்கதை ஆசிரியர்களில் ஒருவராகவும் அவர் போற்றப்பட்டார்.

இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர், எழுத்தாளர் என பல்வேறு துறைகளில் திறமையை வெளிப்படுத்திய பாக்யராஜ், பல தசாப்தங்களாக தமிழ் சினிமாவின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றினார். அண்மைக்காலங்களிலும் குணச்சித்திர வேடங்களில் தொடர்ந்து நடித்துவந்தார்.

பாக்யராஜின் மறைவுக்கு திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் ரசிகர்கள் சமூக வலைதளங்கள் வாயிலாக இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரது படைப்புகளும், திரைக்கதை பாணியும் தமிழ் சினிமாவில் என்றும் நிலைத்திருக்கும் என பலரும் புகழஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள Cinema Seithi WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW