தொடக்க வார இறுதியில் வசூலில் முன்னேற்றம் கண்ட கார்த்திக் சுப்பராஜின் 'டோரதி' திரைப்படம்
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள டொரோதி திரைப்படம் தனது தொடக்க வார இறுதி முடிவில் இந்தியாவில் 4.15 கோடி ரூபாய் மொத்த வசூலை எட்டியுள்ளது.
இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரிஷிகாந்த், சனந்த் மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள 'டோரதி' திரைப்படம், திரையரங்குகளில் வெளியான முதல் மூன்று நாட்களில் தனது வசூலில் தொடர் வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
முதல் வார இறுதியில் குறிப்பாக ஞாயிற்றுக்கிழமையன்று இப்படம் தனது அதிகபட்ச ஒருநாள் வசூலை எட்டியுள்ளதுடன், திரையரங்கு வருகை வீதமும் கணிசமாக உயர்ந்துள்ளது.
இந்திய சந்தையில் முதல் மூன்று நாட்களில் இப்படம் 4.15 கோடி ரூபாய் மொத்த வசூலையும், 3.55 கோடி ரூபாய் நிகர வசூலையும் ஈட்டியுள்ளது. சர்வதேச அளவில் இதுவரை எந்தவித வசூல் விபரங்களும் பதிவாகவில்லை. மூன்றாம் நாளான ஞாயிற்றுக்கிழமையன்று, 778 காட்சிகளில் இருந்து 46 சதவீத பார்வையாளர் சேர்க்கையுடன் இப்படம் 1.65 கோடி ரூபாய் மொத்த வசூலை ஈட்டியுள்ளது.
இதில் தமிழகத்தில் இருந்து மட்டும் ஞாயிற்றுக்கிழமை 1.30 கோடி ரூபாயும், கர்நாடகாவில் இருந்து 20 இலட்சம் ரூபாயும், கேரளாவில் இருந்து 10 இலட்சம் ரூபாயும், இந்தியாவின் ஏனைய பகுதிகளில் இருந்து 5 இலட்சம் ரூபாயும் வசூலாகியுள்ளது. இதன்மூலம் முதல் வார இறுதியில் தமிழகத்தில் இப்படத்தின் மொத்த வசூல் 3.37 கோடி ரூபாயை எட்டியுள்ளது.
வெள்ளிக்கிழமை வெளியான முதல் நாளில் 33 சதவீத பார்வையாளர்களுடன் 1.05 கோடி ரூபாயும், சனிக்கிழமை 41 சதவீத பார்வையாளர்களுடன் 1.45 கோடி ரூபாயும் வசூலித்த இப்படம், ஞாயிற்றுக்கிழமை மேலும் முன்னேற்றத்தைக் காட்டியுள்ளது.
அதேநேரம், பொது மக்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தாலும், விமர்சகர்களிடையே பரவலான பாராட்டுகளைப் பெற்றுள்ளது. நச்சு ஆண்பால் தன்மை, சாதியப் போக்கு மற்றும் வன்முறைக்கு மத்தியில் வளரும் இரு நண்பர்களின் வாழ்வியல் பார்வையை, கீர்த்தி சுரேஷ் ஏற்கும் டோரதி என்ற பாத்திரம் எவ்வாறு மாற்றியமைக்கிறது என்பதே இப்படத்தின் கதைக்களமாகும்.
இசைஞானி இளையராஜா தனது 1,540 ஆவது திரைப்படமாக இப்படத்திற்கு இசையமைத்துள்ளதுடன், கார்த்திக் சுப்பராஜுடன் அவர் முதன்முறையாக இணைந்து பணியாற்றியுள்ளார். ஜோதி தேஷ்பாண்டே, குனீத் மோங்கா கபூர் மற்றும் அச்சின் ஜெயின் ஆகியோர் தயாரித்துள்ள இப்படத்திற்கு திருநாவுக்கரசு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இதற்கிடையே, அதே காலகட்டத்தில் வெளியான ஹிப்ஹாப் தமிழா ஆதியின் 'மீசைய முறுக்கு 2' திரைப்படம் தனது மூன்றாவது நாளில் 6.05 கோடி ரூபாய் நிகர வசூலுடன் முதல் மூன்று நாட்களில் 13.95 கோடி ரூபாய் நிகர வசூலையும், நடிகர் நானியின் 'தி பாரடைஸ்' திரைப்படம் தனது மூன்றாவது நாளில் 15.25 கோடி ரூபாயுடன் மொத்தம் 76.40 கோடி ரூபாய் இந்திய நிகர வசூலையும் எட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.