பாக்ஸ் ஆபீஸில் சாதனை படைக்கும் சூரியின் 'மண்டாடி': 14 நாட்களில் 111 கோடி ரூபாயைக் கடந்து வரலாற்று வெற்றி
திரையரங்குகளில் 14 நாட்களை நிறைவு செய்துள்ள சூரியின் மண்டாடி திரைப்படம் உலகளவில் 111 கோடி ரூபாயைக் கடந்து சாதனை படைத்துள்ளது.
நடிகர் சூரி நடிப்பில் வெளியான 'மண்டாடி' திரைப்படம் உலகளாவிய ரீதியில் திரையிடப்பட்டு 14 நாட்களை நிறைவு செய்துள்ள நிலையில், அதன் மொத்த வசூல் 111.80 கோடி இந்திய ரூபாயைக் கடந்து பாக்ஸ் ஆபீஸில் புதிய சாதனை படைத்துள்ளது.
அதேவேளை, பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இத்திரைப்படத்துடன் போட்டியாக வெளியான நடிகர் கார்த்தியின் 'சர்தார் 2' திரைப்படம், 14 நாட்களில் உலகளவில் 23.76 கோடி ரூபாயை மட்டுமே வசூலித்து கடுமையான பின்னடைவைச் சந்தித்துள்ளது.
புகழேந்தி மதிமாறன் இயக்கத்தில் பாரம்பரிய பாய்மரப் படகுப் போட்டியைப் பின்னணியாகக் கொண்டு வெளியான 'மண்டாடி' திரைப்படம், ஆரம்பம் முதலே நேர்மறையான விமர்சனங்களைப் பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கின்றது.
இத்திரைப்படம் இந்தியாவில் 95.75 கோடி ரூபாயையும், சர்வதேச சந்தைகளில் 16.05 கோடி ரூபாயையும் மொத்த வசூலாக ஈட்டியுள்ளது. இதன் மூலம் இந்தியாவின் நிகர வசூல் 81.90 கோடி ரூபாயை எட்டியுள்ளது. 14 ஆவது நாளான நேற்றைய தினம் இந்தியாவில் 3,142 காட்சிகளில் திரையிடப்பட்ட இப்படம், சுமார் இரண்டு கோடி ரூபாய் நிகர வசூலை ஈட்டியுள்ளதுடன், இதில் தமிழ் பதிப்பு 1.45 கோடி ரூபாயையும் தெலுங்கு பதிப்பு 55 இலட்சம் ரூபாயையும் பெற்றுக்கொடுத்துள்ளன.
மறுபுறம், பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் உருவான கார்த்தியின் 'சர்தார் 2' திரைப்படம், தனது முதல் வாரத்திற்குப் பின்னர் திரையரங்குகளில் போதிய இரசிகர் ஆதரவைப் பெறத் தவறியுள்ளது. உலகளவில் 23.76 கோடி ரூபாயை வசூலித்துள்ள இப்படம், இந்தியாவில் 18.91 கோடி ரூபாய் மொத்த வசூலையும், 16.22 கோடி ரூபாய் நிகர வசூலையும் மாத்திரமே பதிவு செய்துள்ளது.
சர்வதேச சந்தைகளில் 4.85 கோடி ரூபாயை மட்டுமே ஈட்டியுள்ள இத்திரைப்படத்தின் தமிழ் பதிப்பானது, கடந்த மூன்று நாட்களாக நாளொன்றுக்கு வெறும் 11 இலட்சம் ரூபாயை மாத்திரமே வசூலித்து பெரும் சரிவைக் கண்டுள்ளது.
பாரிய பொருட்செலவில் உருவான உளவாளி அதிரடித் திரைப்படமான 'சர்தார் 2' கலவையான விமர்சனங்களால் பின்தங்கியுள்ள நிலையில், எளிய பின்னணியைக் கொண்ட கிராமிய விளையாட்டு அதிரடித் திரைப்படமான 'மண்டாடி', பொதுமக்களின் ஏகோபித்த ஆதரவினால் தொடர்ந்தும் வசூல் வேட்டை நடத்தி வருகின்றது.
நகைச்சுவை நடிகராக இருந்து கதாநாயகனாக உயர்ந்த நடிகர் சூரியின் திரைப்பயணத்தில், உலகளாவிய ரீதியில் 100 கோடி ரூபாய் வசூலைக் கடந்த முதலாவது திரைப்படமாக 'மண்டாடி' இடம்பிடித்துள்ளதுடன், இவ்வாண்டின் மிகப்பெரிய வசூல் சாதனைகளில் ஒன்றாகவும் உருவெடுத்துள்ளது.