பா. ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா மற்றும் தினேஷ் இணையும் 'வெட்டுவம்' திரைப்படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியானது
பா. ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா மற்றும் தினேஷ் நடிப்பில் உருவாகும் 'வெட்டுவம்' திரைப்படத்தின் பிரத்தியேகப் பார்வை செப்டெம்பர் 18 ஆம் திகதி வெளியாகவுள்ளது.
இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா மற்றும் 'அட்டகத்தி' தினேஷ் ஆகியோர் பிரதான வேடங்களில் நடித்துள்ள 'வெட்டுவம்' திரைப்படத்தின் உலகம் தொடர்பான பிரத்தியேகப் பார்வை எதிர்வரும் செப்டெம்பர் 18 ஆம் திகதி வெள்ளிக்கிழமை உத்தியோகபூர்வமாக வெளியிடப்படவுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
'தங்கலான்' திரைப்படத்திற்குப் பின்னர் பா. ரஞ்சித் இயக்கும் எட்டாவது முழுநீளத் திரைப்படமாக இது உருவாகி வருகின்றது.
கடந்த 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற கான் திரைப்பட விழாவில் முதன்முதலாக அறிவிக்கப்பட்ட இத்திரைப்படத்தின் வெள்ளோட்டக் காணொளி கடந்த ஆண்டு நடிகர் தினேஷின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடப்பட்டிருந்தது.
'அட்டகத்தி' திரைப்படத்திற்குப் பின்னர் பா. ரஞ்சித்துடன் மீண்டும் இணையும் தினேஷ் இதில் தற்காப்புக் கலை வீரராகக் களமிறங்குவதுடன், 'சார்பட்டா பரம்பரை' திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் இணையும் ஆர்யா இதில் குற்றக்கும்பல் தலைவராக நடிப்பதாகக் கூறப்படுகின்றது.
மணிரத்னத்தின் 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தின் ஊடாகத் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை சோபிதா துலிபாலா இதில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
இவர்களுடன் கலையரசன், மைம் கோபி, குரு சோமசுந்தரம், ஷபீர் கல்லரக்கல், ஜோன் விஜய், சாய் தீனா, ஆனந்த் சாமி, ஹரிஷ் உத்தமன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் இப்படத்தின் நட்சத்திரப் பட்டாளத்தில் இணைந்துள்ளனர்.
இத்திரைப்படத்திற்கு ஜீ.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கின்றார். மேலும், ரூபேஷ் ஷாஜி ஒளிப்பதிவாளராகவும், செல்வா ஆர்.கே. படத்தொகுப்பாளராகவும், எஸ்.எஸ். மூர்த்தி கலை இயக்குநராகவும், திலீப் சுப்பராயன் சண்டைப் பயிற்சி இயக்குநராகவும் பணியாற்றியுள்ளனர். இத்திரைப்படத்தின் வசனங்களை பிராங்க்ளின் ஜேக்கப் எழுதியுள்ளதுடன், சந்தோஷ் நாராயணன் செந்தில்குமார் இணை எழுத்தாளராகப் பணியாற்றியுள்ளார்.
இயக்குநர் பா. ரஞ்சித்தின் 'நீலம் புரொடக்ஷன்ஸ்' நிறுவனத்துடன் இணைந்து, எஸ். சாய் தேவானந்த் மற்றும் எஸ். சாய் வெங்கடேஸ்வரன் ஆகியோர் தங்களது 'லேர்ன் அண்ட் டீச் புரொடக்ஷன்' நிறுவனத்தின் ஊடாக இத்திரைப்படத்தைத் தயாரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.