பழம்பெரும் பாடகி சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படத்தில் ராஷ்மிகா மந்தனா
மறைந்த புகழ்பெற்ற கர்நாடக இசை மேதை எம்.எஸ். சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படம் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், அதில் ராஷ்மிகா மந்தனா நடிக்கவுள்ளார்.
புகழ்பெற்ற கர்நாடக இசை மேதையும் பாரத ரத்னா விருது பெற்றவருமான மறைந்த எம்.எஸ். சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படத்தின் அதிகாரபூர்வ ஆரம்ப நிகழ்வு இடம்பெற்றுள்ளதுடன், அதில் அவரது கதாபாத்திரத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்கவுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பான் இந்திய திரைப்படமாக உருவாகவுள்ள இந்த பிரம்மாண்ட திரைப்பட திட்டத்தை, எம்.எஸ். சுப்புலட்சுமியின் 110 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு நடிகர் கமல்ஹாசன் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்துள்ளார்.
கௌதம் தின்னூரி இயக்கவுள்ள இந்த திரைப்படத்தை பிரபல தயாரிப்பாளர்களான அல்லு அரவிந்த், ராக்லைன் வெங்கடேஷ் மற்றும் பன்னி வாஸ் ஆகியோர் இணைந்து தயாரிக்கவுள்ளனர்.
அத்துடன் இத்திரைப்படத்துக்கு அனிருத் இசையமைக்கின்றார். தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் உருவாகவுள்ள இத்திரைப்படம் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
திரைப்படத்தின் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய உலகநாயகன் கமல்ஹாசன், எம்.எஸ். சுப்புலட்சுமி தனது தனித்துவமான குரலினால் முழு இந்தியாவையும், குறிப்பாக தென்னிந்தியாவை ஒன்றிணைத்த ஓர் இசைப் பேரரசி என்று கூறினார்.
சமஸ்கிருதம், இந்தி, தெலுங்கு, தமிழ் மற்றும் கன்னடம் எனப் பல மொழிகளில் பாடிய அவர், தனது இசையின் ஊடாக மொழிகளுக்கு மேலும் அழகு சேர்த்தார் எனவும், மகாத்மா காந்தி கூட அவரது இசையின் தீவிர ரசிகராக விளங்கினார் எனவும் கமல்ஹாசன் நினைவுகூர்ந்துள்ளார்.
மேலும், அனிருத்தின் இசைப் பயணம் இத்திரைப்படத்தின் மூலம் அடுத்த கட்டத்தை எட்டும் எனத் தெரிவித்த அவர், எம்.எஸ். சுப்புலட்சுமியின் கதாபாத்திரத்தை ஏற்கும் வாய்ப்பு ராஷ்மிகா மந்தனாவிற்கு கிடைத்துள்ளமை பொருத்தமானது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வாய்ப்பு குறித்து நெகிழ்ச்சி வெளியிட்டுள்ள நடிகை ராஷ்மிகா மந்தனா, ஒரு நடிகையாக தனக்கு கிடைத்த மிகப்பெரிய பாக்கியம் இதுவெனத் தெரிவித்துள்ளார். எம்.எஸ். சுப்புலட்சுமியின் 110 ஆவது பிறந்தநாளில் இந்த மேடையில் நிற்பது இறைவனின் சந்நிதியில் நிற்பது போன்ற உணர்வைத் தருவதாகவும், அவரது வாழ்வின் ஒரு சிறிய பகுதியாக இணைவதில் பெருமிதம் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கதாபாத்திரத்திற்காக தனது முழுமையான உழைப்பையும் அர்ப்பணிப்பையும் வழங்கவுள்ளதாக அவர் உறுதியளித்துள்ளார்.
1916 ஆம் ஆண்டு செப்டம்பர் 16 ஆம் திகதி மதுரையில் பிறந்த எம்.எஸ். சுப்புலட்சுமி, சிறுவயதிலேயே இசையைக் கற்று தனது 11 ஆவது வயதில் திருச்சிராப்பள்ளி மலைக்கோட்டை ஆலயத்தில் தனது முதல் கச்சேரியை நிகழ்த்தியிருந்தார்.
செம்மங்குடி சீனிவாச ஐயர் மற்றும் பண்டிட் நாராயணராவ் வியாஸ் ஆகியோரிடம் இசைப் பயிற்சி பெற்ற இவர், இசைத் துறைக்கு ஆற்றிய பெரும் பங்களிப்பிற்கு அப்பால், 1930 மற்றும் 1940 ஆம் ஆண்டுகளில் 'சேவா சதனம்', 'மீரா' போன்ற திரைப்படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.