அஜித்தின் 'டேர்டெவில்' படப்பிடிப்பு நவம்பர் 2 ஆம் திகதி ஆரம்பம்: படக்குழு உத்தியோகபூர்வ அறிவிப்பு
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் குமார் நடிக்கும் 'டேர்டெவில்' திரைப்படத்தின் படப்பிடிப்பு எதிர்வரும் நவம்பர் 2 ஆம் திகதி உத்தியோகபூர்வமாக ஆரம்பமாகவுள்ளது.
நடிகர் அஜித் குமார் மற்றும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் உருவாகும் 'டேர்டெவில்' (Daredevil) திரைப்படத்தின் படப்பிடிப்பு எதிர்வரும் நவம்பர் மாதம் 2 ஆம் திகதி உத்தியோகபூர்வமாக ஆரம்பமாகவுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
'குட் பேட் அக்லி' திரைப்படத்தைத் தொடர்ந்து இவர்கள் இருவரும் தொடர்ச்சியாக இணையும் இரண்டாவது திரைப்படம் இதுவாகும்.
இத்திரைப்படத்தினை நடிகர் அஜித் குமாரின் மனைவியும் முன்னாள் பிரபல நடிகையுமான ஷாலினி அஜித் குமார் தனது 'பிரேவ்ஹார்ட்ஸ் புரொடக்ஷன்' தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் தயாரிக்கின்றார். இதன் மூலம் ஷாலினி அஜித் குமார் தயாரிப்பாளராக திரைத்துறையில் காலடி எடுத்து வைக்கின்றார்.
இத்திரைப்படத்தின் தலைப்பு கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியிடப்பட்டிருந்த நிலையில், தற்போது படப்பிடிப்பு ஆரம்பமாகும் திகதி உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இத்திரைப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கவுள்ளார். 'விடாமுயற்சி' திரைப்படத்திற்குப் பின்னர் அஜித் குமார் திரைப்படத்திற்கு மீண்டும் அனிருத் இசையமைப்பதுடன், இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனுடன் அனிருத் இணையும் முதல் படமாகவும் இது அமைகின்றது.
மேலும், அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவாளராகவும், விஜய் வேலுக்குட்டி படத்தொகுப்பாளராகவும், சுப்ரீம் சுந்தர் சண்டைப்பயிற்சி இயக்குநராகவும், மெய்யழகன் திரைப்படத்திற்காக 72 ஆவது தேசிய திரைப்பட விருதுகளில் சிறப்புப் பாராட்டுப் பெற்ற சுரேன் ஒலி வடிவமைப்பாளராகவும் இப்படத்தில் பணியாற்றவுள்ளனர்.
கார் பந்தயப் போட்டிகளில் தீவிர கவனம் செலுத்துவதற்காக திரைத்துறையில் இருந்து ஒரு வருட கால இடைவெளி எடுத்திருந்த அஜித் குமார், இத்திரைப்படத்தின் மூலம் மீண்டும் சினிமாவுக்குத் திரும்புகின்றார். அண்மையில் 'அஜித் குமார் ரேசிங்' அணியின் சார்பில் லண்டனில் நடைபெற்ற லீ மான்ஸ் தொடர் போட்டிகளில் முன்னாள் ஃபார்முலா 1 வீரர் நரேன் கார்த்திகேயனுடன் இணைந்து அவர் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.