ஜீவனாம்ச வழக்கில் ரவி மோகனுக்கு பின்னடைவு... மனுவை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றம்

மனைவி ஆர்த்தி தாக்கல் செய்த இடைக்கால ஜீவனாம்ச மனு தொடர்பான வழக்கில் காலக்கெடு நீட்டிப்பு கோரி நடிகர் ரவி மோகன் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

Published on: 08 Jun 2026, 06:27 pm

எம்மை கூகுளில் பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

Add as Preferred Source
ஜீவனாம்ச வழக்கில் ரவி மோகனுக்கு பின்னடைவு... மனுவை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றம்

நடிகர் ரவி மோகன் மற்றும் அவரது மனைவி ஆர்த்தி ரவி இடையேயான விவாகரத்து மற்றும் ஜீவனாம்சம் தொடர்பான சட்டப்போராட்டம் தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில், ஜீவனாம்ச வழக்கு தொடர்பாக நடிகர் ரவி மோகன் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

கருத்து வேறுபாடுகள் காரணமாக மனைவி ஆர்த்தியிடமிருந்து பிரிய முடிவு செய்ததாக அறிவித்த ரவி மோகன், திருமண பதிவை ரத்து செய்து விவாகரத்து வழங்கக் கோரி நீதிமன்றத்தை அணுகியிருந்தார். இந்த வழக்கு தற்போது நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

வழக்கின் போது, இரு தரப்பினரும் பொதுவெளியில் ஒருவரை ஒருவர் குறித்து அவதூறாகவோ அல்லது தனிப்பட்ட விமர்சனங்களோ செய்யக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் முன்பே உத்தரவிட்டிருந்தது. எனினும், கடந்த மே மாதம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ரவி மோகன் சில குற்றச்சாட்டுகளை முன்வைத்ததாக கூறப்பட்ட நிலையில், நீதிமன்ற உத்தரவை மீறியதாக ஆர்த்தி ரவி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்து ரவி மோகன் பொது மன்னிப்பு கோரும் அறிவிப்பை வெளியிட்டதாகவும், அதற்கான ஆவணங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியானது.

இதற்கிடையில், குழந்தைகளின் கல்விக் கட்டணம் உள்ளிட்ட செலவுகளுக்காக ஏப்ரல் 2025 முதல் எந்தவித இடைக்கால ஜீவனாம்சமும் வழங்கப்படவில்லை என்று குற்றம்சாட்டி, ஆர்த்தி ரவி குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விரைந்து விசாரிக்க உத்தரவிடுமாறு அவர் சென்னை உயர்நீதிமன்றத்தையும் அணுகியிருந்தார்.

வழக்கை பரிசீலித்த உயர்நீதிமன்றம், ஆர்த்தி தாக்கல் செய்த இடைக்கால ஜீவனாம்ச மனுவை இரண்டு வாரங்களுக்குள் விசாரித்து உரிய உத்தரவு பிறப்பிக்க குடும்ப நல நீதிமன்றத்திற்கு அறிவுறுத்தியது.

இதையடுத்து, குடும்ப நல நீதிமன்றத்திற்கு வழங்கப்பட்டிருந்த காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என்று ரவி மோகன் புதிய மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி முன்பு விசாரணைக்கு வந்தபோது, ஆர்த்தி ரவி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் காலக்கெடுவை நீட்டிக்கக் கூடாது என்று வாதிட்டார்.

இரு தரப்பின் வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், ரவி மோகன் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து, தேவையான நிவாரணங்களை பெற குடும்ப நல நீதிமன்றத்தை அணுகுமாறு அறிவுறுத்தியுள்ளது.

இதன் மூலம், இடைக்கால ஜீவனாம்சம் தொடர்பான விசாரணை குடும்ப நல நீதிமன்றத்தில் விரைவாக நடைபெற வழி வகுக்கப்பட்டுள்ளது.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள Cinema Seithi WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW